அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

Published Date: June 13, 2025

CATEGORY: CONSTITUENCY

மதுரையில் அவ்வை  மாநகராட்சியின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சமுதாய கூடத்தினை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று திறந்து வைத்தார்.

மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நமக்கு நாமே திட்டம் தனியார் வங்கிகளின் சமூகப் பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ் பள்ளிக்கூடங்களை மேம்படுத்துதல், பூங்காக்கள் அமைத்தல், பொது சுகாதார மையம் அமைத்தல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தனியார் பங்களிப்புகள் பெறப்பட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரை மாநகராட்சி 52வது வார்டில் உள்ள அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 24 இலட்சம் மதிப்பில் புதிதாக கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதைப்போல்  76 வது வார்டு மேலவாசல் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 45 இலட்சம் மதிப்பில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டிடங்களை மாணவிகள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று திறந்து வைத்தார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் மூன்று சக்கர வாகனங்களையும் அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வுகளில் மேயர் இந்திராணி, கமிஷனர் சித்ரா விஜயன், மண்டல தலைவர் பாண்டிச் செல்வி, கல்விக் குழு தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Media: Dinakaran